தலச்சிறப்பு |
தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சம், பாரிஜாதம், மந்தாரம், சந்தனம், அரிசந்தனம் ஆகிய ஐந்து மரங்களும் ஒரு சமயம் துர்வாச முனிவரின் கோபத்திற்கு இலக்காகி இத்தலத்தில் நெல்லி மரமாக மாறின. அவை முனிவரிடம் சாப விமோசனம் வேண்ட, இங்கு சிவபூஜை செய்து வழிபட்டு வந்தால் சாபம் நீங்கும் என்று கூறினார். விருட்சங்களும் அவ்வாறே வழிபட்டு சாப விமோசனம் பெற்றன. அதனால் இத்தலம் 'திருநெல்லிக்கா' என்று வழங்கப்படுகிறது. இத்தலத்து மூலவரும் 'நெல்லிவனநாதர்' என்ற அழைக்கப்படுகிறார். இங்கு கோயிலும், மூலவரும் மேற்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
மூலவர் 'நெல்லிவனநாதர்', 'ஆம்லகவனேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சற்று மெல்லிய உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மங்களநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி முதல் 7 நாட்களும், மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 7 நாட்களும் மூலவர் மீது சூரிய ஒளி படும் சூரிய பூஜை நடைபெறுகிறது.
பிரம்மா, சூரியன், சோழ மன்னர்களான ஆமலகேச சோழன், உத்தம சோழன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|